கீதா தியானம்
ஏதொரு காரியத்தில் ஈடுபடும்போதும் முதலில் நம் மனதை அதில் நிலைநிறுத்த வேண்டும். இல்லையேல் நம் கவனம் அந்தக் காரியத்தில் செல்லாது. லோக சம்பந்தப்பட்ட காரியமானாலும் சரி, ஆத்மீக விசாரமானாலும் சரி, முதலில் இறை வணக்கம் சைய்வது முறை. உலக சம்பந்தப்பட்ட காரியங்களுக்கே இந்த நியதியானால் தெய்வ காரியங்களுக்குக் கேட்க வேண்டுமோ? உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கி அலைபாயும் மனதை ஓர் நிலைக்குக் கொண்டுவந்து நாம் செய்யப்போகும் காரியத்தில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் காரியம் பலிதமாகும். மனம் நிலயிலில்லாமால் ஒரு காரியமும் செய்ய இயலாது. மனம் தான் முதல் தோழன். அதுதான் முதல் எதிரியும் கூட. ஆகையால் இந்த மனதை நம் வசம் கொண்டு வருவது மிக அவசியம். மனதை ஒரு நிலைப் படுத்த அதை ஒர் ஸத் விசாரத்தில் நிலயாக இருத்த வேண்டும். ஏனெனில் விசாரக்கோர்வை தான் மனம். விசாரத்தை நாடியே மனம் இயங்குகிறது.. விசாரமில்லையேல் மனமும் இல்லை. நீங்கள் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிப்பதற்கு முன் பகவானை தியானம் செய்யும் பொருட்டு உங்களுக்குத் தெரிந்த நித்திய ஸ்லோகங்களில் சிலவற்றைச் சொல்வீர்களானால் நீங்கள் படிக்கும் புத்தக விஷயம் எளிதில் உங்களுக்கு விளங்கும். காரணம், நம்மை இறைவன் அருளுக்குப் பாத்திரமாகச் செய்யவேண்டும். நாம் செய்யப்போகும் காரியத்தில் கருத்தாக இருக்க இறைவனின் அருளும் குருநாதரின் க்ருபையும் வேண்டியது அவசியம்.
அதுபோல் இங்கு கீதை ஸாரத்தை நாம் உணர்வதற்காக இந்த இறை குரு வணக்க ஸ்லோகங்கள் தரப்பட்டுள்ளன. இதன் பிறகு வரும் ஸ்லோகங்கள் மூலமாகவே நமக்கு கீதை எங்கிருந்து, யாரால், எவருக்காக, எப்போது படைக்கப்பட்டது, அதன் விசேஷம் என்ன, அதில் தந்துள்ள தத்துவம் ஏது, அதனால் நமக்கு என்ன பயன் போன்ற விஷயங்கள் மிகத் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இதுவே கவியின் சாமர்த்தியம். கவிகள் தாம் சொல்லப் போகிற விஷயத்தைச் சுருக்கமாக முன்னதாகவே வெளியிடுவது வழக்கம். பின் வரும் ஸ்லோகங்களைக்கொண்டு கிரந்தகர்த்தா தாம் கையாளப் போகும் காரியத்தைப் பற்றியும் அதற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மிக அழகாகத் தந்துள்ளார். 9 தியான ஸ்லோகங்கள் தரப்பட்டுள்ளன. கீதையைப் படிப்பதற்கு முன்பு இந்த 9 தியான ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டியது மிக அவசியம். அப்போதுதான் நம் மனம் அதில் ஈடுபட்டு நம்மால் இந்த கீதோபதேச அம்ருதத்தைத் தடையில்லமல் பருக முடியும்.
ஓவ்வொரு ஸ்லோகத்தின் கீழும் தந்துள்ள பொறியில் ஸ்லோகத்தை கேட்கலாம்.
தியான ஸ்லோகங்கள்
பார்த்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம்
வ்யாஸேன க்ரதிதாம் புராணமுனினா மத்யே மஹாபாரதம்
அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்டா தசாத்யாயினீம்
அம்பத்வாம் அனுஸந்ததாமி பகவத் கீதே பவத்வேஷிணீம்