அவன் செய்து வைத்திருந்த பிள்ளையார் உருவங்களும், பிற தெய்வ, மனித உருவங்களும் தத்ரூபமாக விளங்குவதைக் கண்டு மிகவும் வியப்படைந்தார் அவர்.
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
எனும் மஹாகவி பாரதியின் பாட்டை மல்லிகா இசை லயத்துடன் இனிமையாய்ப் பாடுவதைக் கேட்டுக்கொண்டு சற்று நேரம் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தபின் விருந்துண்ண அனைவரும் அமர்ந்தனர். ஆலயம் நிர்மாணிக்கும் புனிதமான பணியை ஏற்றிருக்கும் ஸ்தபதியைத் தங்கள் இல்லத்திற்கு அழைத்துவந்து விருந்து படைப்பதற்கு ராமுவும் சீதாவும் மிகவும் மகிழ்ந்தனர்.
விருந்துண்ட பின்னர் சற்று நேரம் அளவளாவுகையில் ஸ்தபதி ராமுவை நோக்கி, "உங்கள் பையன் மிகவும் பாக்கியசாலி. களிமண்ணைக் கொண்டு கண்கவரும் தெய்வ, மற்றும் மனித உருவங்களைத் தத்ரூபமாக வடிக்கும் மிக அற்புதமான கலை அவனிடம் இயற்கையிலேயே ஆண்டவன் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது." என்று வாழ்த்திப் பின்னர், "அவனுக்கு வயது என்னவாகிறது?" என்று கேட்டார்.
ராமு, "சாமி, அவனுக்கு சென்ற மாதத்துடன் 18 வருடங்கள் நிறைவடைகிறது. பள்ளிப்படிப்பில் அவன் மனம் செல்லவில்லை. எப்பொழுதும் ஏதாவது பொம்மை செய்வதிலேயே அவன் நாட்டம் உள்ளது. நாங்களும் அதற்காக அவனைக் கண்டிப்பதில்லை. எல்லாம் கடவுள் கருணை. அவனுக்கு இறைவன் நல்வழி காட்டுவார் என்று நம்புகிறோம்." என்றார்.
"உங்கள் நம்பிக்கை என்றும் வீண்போகாது ராமு, குணாவை என்னுடன் கும்பகோணம் அனுப்பி வைக்கிறீர்களா? அவனுக்கு தெய்வச்சிலைகளை வெண்கலத்தாலும் ஐம்பொன்னாலும் வடிக்கக் கற்றுத்தருகிறேன். பிற்காலத்தில் அவன் ஒரு மாபெரும் சிற்பியாவான்." என்றார் ஸ்தபதி.
அவர் சொற்கள் குணாவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. ராமுவும் சீதாவும் தங்கள் மகனுக்கு அவனுக்கு விருப்பமான துறையில் ஒரு நல்வாய்ப்பு கிடைப்பதை எண்ணி மிகவும் மகிழ்ந்தனர். விவசாய நிலத்தில் கூலிவேலை செய்து பிழைக்கும் கடினமான வாழ்வு தம் மகனுக்கு வாய்க்காததற்காக மிகவும் மன நிம்மதியுற்றனர்.
"தங்கள் பிரியம்போல் செய்யுங்கள் சாமி, அவன் இனி உங்கள் பொறுப்பு, அவனுக்கு ஒரு நல்வழி காட்டுங்கள்." என்று ராமு பதிலிறுத்தார்.
"நல்லது, நாளை நான் குணாவை என்னுடன் கும்பகோணத்திற்கு அழைத்துச்செல்கிறேன், அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் மகள் மல்லிகா மிக அழகாகப் பாடுகிறாள், ஆனால் அவளுக்கு முறையாக சங்கீதம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளும் ஒரு பெரிய பாடகியாகும் வாய்ப்பிருக்கிறது." என்று சொல்லி ஸ்தபதி அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
முன்னர் ஒரே ஒரு முறை மகாமகம் திருவிழாவின் போது கும்பகோணத்திற்குத் தன் தாய் தந்தையருடனும் சகோதரியுடனும் சென்று வந்ததிலிருந்து அங்குள்ள கும்பேஸ்வரர் கோவில், ராமர் கோவில், சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில் மற்றும் பல ஆலயங்களில் தான் கண்ட தெய்வத் திரூ உருவங்களை மனதில் எண்ணி, அதேபோன்ற வடிவங்களை சமைக்கும் பாக்கியம் தனக்குக் கிட்டுமா என்று ஆசைக் கனவு கண்டுகொண்டிருந்த குணா, தன் கனவு நினைவாகும் தருணம் வந்துவிட்டதை எண்ணி உளம்மிக மகிழ்ந்து அன்றிரவு தெய்வீகக் கனவுகளுடன் உறங்கச்சென்றான்.
தொடரும் ....