கும்பகோணம் வந்ததும் குணாவிற்கு அவனது வயதையொத்த ஒரு நல்ல ஸ்நேகிதனும் கிடைத்துவிட்டான். அவன் பெயர் மாணிக்கம், ஸ்தபதியின் அக்காள் மகன். கும்பகோணத்திலேயே பிறந்து வளர்ந்து பள்ளி இறுதிப் படிப்பை முடித்த மாணிக்கம் தன் பெற்றோர்களுடன் கும்பகோணத்திலேயே வசித்துவந்தான். அவனுக்கும் சிற்பக்கலையில் ஆவல் மிக இருந்தமையால் நேரம் கிடக்கும் பொழுதெல்லாம் ஸ்தபதியான தன் மாமாவின் வீட்டுடன் அமைக்கப்பட்ட பட்டரைக்கு வந்து அங்கே விதவிதாமாய் கண்கவரும் வெண்கலச் சிற்பங்களும், ஐம்பொன்னாலான சிற்பங்களும் உருவாக்கப்படுவதை ஆர்வத்துடன் கவனித்து வந்தான். குணாவிற்குப் பட்டரையிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடுத்திருந்தார் ஸ்தபதி. அப்போது அங்கு வந்திருந்த மாணிக்கத்துடன் சற்று நேரம் பேசுகையில் மாணிக்கம் தனக்கேற்ற நல்ல நண்பனாவான் என்று குணா கண்டுகொண்டு அவனிடம் மனம் விட்டுப் பேசிப் பழகலானான்.
மாணிக்கம் குணத்திலும் மாணிக்கம்தான். குணாவைக்கண்டு அவனது கலைத்திறமையைப்பற்றி அறிந்ததும் அவன் குணாவுடன் மிகவும் நெருங்கிய நட்புக்கொண்டான். குணாவுக்குக் கும்பகோணத்திலும், மற்றும் அதன் அருகிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள பல ஆலயங்களைப்பற்றியும், அங்குள்ள பல உயர்ந்த சிற்பங்களைப்பற்றியும் விவரமாக எடுத்துரைக்கலானான். மாணிக்கம் கூறுவதைக் கேட்கக்கேட்க குணா அவ்வாலயங்களுக்குச் சென்று தானும் காணவேண்டுமென்று மிக விரும்பித் தன்னை அங்கெல்லாம் அழைத்துப் போக வேண்டுமென்று மாணிக்கத்தை ஆவலுடன் கேட்டுக்கொண்டான்.
மகாமகக்குளத்தில் ஸ்நானம் செய்தவுடன் குணாவிற்கு மாணிக்கத்தின் நினைவு வந்தது. அவன் தனக்காக ஸ்தபதியின் வீட்டில் காத்திருப்பதாகக் கூறியதை நினைவுகூர்ந்த குணா தன் இருப்பிடத்தை அடைகையில் அங்கே தனக்காக நண்பன் மாணிக்கம் காத்திருப்பதைக் கண்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தான். தங்கள் ஆலய தரிசனத் திட்டத்தை ஸ்தபதியின் ஆசியும் அனுமதியும் பெற்று இருவரும் உடனே துவங்கினர். அன்று கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில், ராமர் கோவில் மற்றும் சாரங்கபாணி கோவில் மூன்றையும் தரிசிப்பதென்று முடிவு செய்து இருவரும் சிற்றுண்டி அருந்திவிட்டுக் கிளம்பினர்.
தொடரும் ....
அத்தியாயம் - 3
மற்ற கதைகள்