இப்பொழுது அவள் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியதை அறிந்து அவளை மனதுக்கும் மிகவும் பாராட்டினான். அவள் பாட்டைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் அவன் மனதில் ஏற்பட்டது. ஆனால் அவள் இப்போது தன் ஊரிலல்லவா இருக்கிறாள். இடையில் ஒரு முறை ஊருக்குச் சென்று தந்தை, தாய், தங்கை, மற்றும் தன் கிராமத்து சகாக்கள் அனைவரையும் கண்டு வர வேண்டுமென்று எண்ணிக்கொண்டான். அப்போது அங்கு வந்த மாணிக்கம் மல்லிகாவின் பாட்டுத்திறமையைப் பற்றி குணா சொல்லக் கேட்டதும் தானும் அவள் பாட்டைக் கேட்க விரும்புவதாகவும் குணா ஊருக்குச் செல்கையில் தானும் அவனுடன் வர விரும்புவதாகவும் சொன்னான்.
அவர்களிருவரும் கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் பல கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களையும் பிற இடங்களையும் பார்த்து மிகவும் மகிழ்ந்திருந்தனர். அவர்களின் ஆலய தரிசனத் திட்டம் ஸ்தபதி கோவில் பணியை மறு நாளிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
குணாவுடன் பழகியதிலிருந்து மாணிக்கத்திற்கு சிற்பக்கலை மேலிருந்த ஈடுபாடு அதிகரிக்கவே தானும் குணாவுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினான். அவன் பள்ளி இறுதிப்படிப்பை முடிதிருந்தாலும் மேற்படிப்பைப் பற்றிய சிந்தனைகள் அவன் மனதில் ஏதுமில்லை. தன் மனதுக்குப் பிடித்த தொழிலொன்றைக் கற்றுக்கொண்டு அதில் முன்னேறுவதே அவனது நோக்கமாக இருந்தது. எந்தத் தொழிலைக் கற்பது என்று இதுவரை முடிவு செய்யாத நிலையில் தற்போது அவனுக்குக் கிடைத்த குணாவின் சினேகிதத்தால் இம்முடிவுக்கு வந்தான். அவனது பெற்றோர்களும் அவனது விருப்பத்துக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. அவனது மாமாவான ஸ்தபதியும் சந்தோஷமாக அவனுக்கு சிற்பக்கலையைக் கற்றுக்கொடுக்க ஒப்புக்கொண்டார்.