Google
 
Web www.mazalais.com
Enable unicode to view Tamil contents

மஹா பாரதம்

கதைகள்

கதைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக, குழந்தைகளுக்குக் கதைகள் கேட்பதில் அலாதி ஆர்வம் உண்டு. தினமும் இரவில் படுக்கைக்குச் சென்ற பின் கதை கேட்டால் தான் பெரும்பான்மையான குழந்தைகள் உறங்குவார்கள். நல்ல கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக மலர்வதுண்டு. இதற்கு உதாரணம் மராட்டிய மன்னர் வீர சிவாஜி. அவரது தாயார் கூறிய வீரக் கதைகளைக் கேட்டு மாவீரராக உருவானவர் சிவாஜி. நமது நாட்டில் கதைகளுக்குப் பஞ்சமில்லை. அக்கதைகளுள் மிகவும் உன்னதமான வாழ்க்கைக்குப் பயன் படக்கூடிய பாடங்கள் பல கொண்ட கதை மஹாபாரதக் கதை.

மஹா பாரதம்

Know about the producer of Mahabharat TV serial courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra மஹாபாரதக் கதை வியாசர் என்ற ஒரு முனிவரால் சொல்லப்பட்டு முழு முதற் கடவுளான விநாயகர் எழுதியது . வியாசர் வேதங்களைத் தொகுத்துத் தந்தவர். அதனால் அவர் வேத வியாசர் என்று அழைக்கப் படுகிறார். வியாசர் பராசரர் என்ற மஹரிஷிக்கும் சத்தியவதி என்ற மீனவ குலப் பெண்ணுக்கும் பிறந்தவர். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கருத் தரித்தால் மஹா ஞானியான புத்திரன் பிறப்பான் என்று அறிந்த பராசரர் கங்கை ஆற்றின் அக்கரையில் இருக்கும் தன் மனைவியை அடைய வேண்டியிருந்தது.
ஆற்றைக் கடக்கப் படகு தேவைப்பட்டது. வெகு நேரமாகியும் படகு கிடைக்காமல் பின்னர் சத்யவதியின் உதவி கிட்டியது. சத்யவதி பராசரரைத் தன் படகில் ஏற்றிச் செல்ல முன்வந்தாள். சத்யவதியை மச்சகந்தி என்றும் அழைத்தனர். மச்சகந்தி என்றால் மேனி எங்கும் மீன் வாடை வீசும் பெண் என்று பொருள். படகு அக்கரையை அடைவதற்குள் குறித்த காலம் கடந்து விடும் நிலைமை ஏற்படவே முனிவர் தன் மனதில் இருப்பதை மச்சகந்தியிடம் தெரிவித்துத் தன் குழந்தைக்குத் தாயாக இருக்குமாறு அவளை வேண்டினார். அவளைத் தன் தபோ வலிமையால் பரிமளகந்தியாக மாற்றினார். பரிமளகந்தி என்றால் மேனி எங்கும் நறுமணம் வீசும் பெண் என்று பொருள். இதுவே வியாச முனிவரது பிறப்பின் ரகசியம்.

கங்கை

அஷ்ட வசுக்கள் ஒரு நாள் வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் அருகில் இருந்த மலைச்சரிவில் தம் மனைவிமாருடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வசிஷ்டரின் பசு நந்தினி புல் மேய்ந்து கொண்டிருப்பதை மனைவிமார்களுள் ஒருத்தி கண்டு தன் கணவனான பிரபாசன் என்பவனிடம் தனக்கு அப்பசு வேண்டுமென்று கேட்டாள். பசுவின் பால் மனிதர்களுக்குத் தான் பயன் படும், தேவர்களான நமக்கெதற்கு? அது மஹா முனிவர் வசிஷ்டரின் பசு. முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விடுவோம். வேண்டாம் என்றான் அவள் கணவன். பெண்ணுக்கே உரிய பிடிவாத குணத்தோடு அப்பெண் தனக்கு மனுஷ்ய லோகத்தில் ஒரு சிநேதி இருப்பதாகவும், அவளுக்காகவே பசுவை வேண்டுவதாகவும் அடம் பிடிக்கவே அனைவரின் துணையுடன் பிரபாசன் பசுவைக் கொண்டு சென்று விட்டான்.

தன் நித்திய கருமங்களுக்கு இன்றியமையாத பசுவை அஷ்ட வசுக்கள் கடத்திச் சென்றதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்த வசிஷ்டர் அவர்கள் மனுஷ்ய லோகத்தில் பிறக்க சாபமிட்டார். முனிவர்கள் மனதில் கோபத்தால் எழும் எண்ணம் சாபமாக மாறி அக்கோபத்துக்குக் காரணமானவர்களை விரட்டும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. முனிவரின் சாபம் அஷ்ட வசுக்களை எட்டியதும் அவர்கள் ஓடோடி வந்து வசிஷ்டரின் காலில் விழுந்து தம்மை மன்னிக்க வேண்டுமென்று கேட்டனர். வசிஷ்டர் மனமிறங்கி பசுவைக் கொண்டு சென்ற பிரபாசன் பூவுலகத்தில் பிறந்து நீண்ட காலம் புகழ்பெற்று வாழ்வான் என்றும் மற்றவர்கள் எழுவரும் பிறந்த உடனே மரணமடைந்து தேவலோகம் திரும்புவர் என்றும் சாப விமோசனம் அளித்தார்.

முனிவரிடம் சாப விமோசனம் பெற்ற அஷ்ட வசுக்கள் கங்கை நதியின் தேவதையான கங்கா தேவியைத் தங்களுக்குத் தாயாக இருக்குமாறும், தாங்கள் பிறந்த உடனே கங்கை நதியில் போட்டு மரணமடையச் செய்யுமாறும் வேண்டினர். கங்கை அவர்கள் வேண்டுகோளை ஏற்று ஒரு நாள் ஹஸ்தினாபுரம் எனும் நட்டை ஆண்ட சந்தனு என்ற மன்னன் கங்கை நதிக்கரையில் உலாவ வருகையில் அவனது கண்ணில் படுமாறு வந்தாள். courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra
courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra கங்கா தேவியின் பேரழகைக் கண்டு காதல் கொண்ட சந்தனு அவளை மணமுடிக்க விரும்புவதாக அவளிடம் கூறினான். தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் தன் நிபந்தனைகளை ஏற்க வேண்டுமென்று கங்கை கூறவே நிபந்தனைகள் என்னவென்று சந்தனு கேட்டான்.
"நான் எதைச் செய்தாலும் யாரும் என்னை ஏன் என்று கேட்கவோ, கடிந்து கொள்ளவோ கூடாது. மீறினால் அக்கணமே நான் உம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன்." என்றாள் கங்கை. கங்கையின் நிபந்தனையை ஏற்று அவளை மணந்தான் சந்தனு. courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra
அவர்களது இல்லற வாழ்க்கை இனிதே நடந்தது. கங்கை தன் முதல் குழந்தையைப் பெற்றாள். பெற்ற குழந்தையை உடனே எடுத்துச் சென்று கங்கை ஆற்றில் போட்டுக் கொன்று விட்டாள்.

கங்கையின் இச்செயலால் சந்தனுவும் மற்றவர்களும் அருவருப்பும் கவலையும் அடைந்தனர். "என்ன பெண் இவள்? இவள் தோற்றத்துக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லையே. எல்லோரிடமும் அன்புடன் நடந்து கொள்கிறாள். அப்படி இருந்தும் பிறந்த குழந்தையை ஆற்றில் போட்டுக் கொல்ல இவளுக்கு எப்படி மனம் வந்தது? அரக்கி போலல்லவா நடந்து கொள்கிறாள்" என்று மனதில் நினைத்த சந்தனு அவளுடைய நிபந்தனையை மீற மனமின்றி கோபத்தையும் குழந்தை இறந்த சோகத்தையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். இவ்வாறு ஏழு குழந்தைகளைப் பெற்று அவை அனைத்தையும் கொன்ற பின் உரிய காலத்தில் எட்டாவது குழந்தையும் பிறந்தது. வழக்கம் போல கங்கை அந்தக் குழந்தையும் கங்கை ஆற்றை நோக்கி எடுத்துச் சென்றாள். சந்தனுவால் தன் கோபத்தை அடக்க முடியாமல் அவளை நோக்கி, "ஏன் இப்படிக் காட்டு மிராண்டி போல் நடந்து கொள்கிறாய். நீ பெற்ற குழந்தைகளை நீயே ஆற்றில் போட்டுக் கொல்ல ஒரு தாயான உன்னால் எப்படி இயல்கிறது? இனியும் இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இக்குழந்தையைக் கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்." என்று கூறினான்.

அதைக்கேட்ட கங்கை, "அரசனே, நீ என் நிபந்தனையை மீறி விட்டாய். அதனால் நான் உன்னை விட்டுச் செல்கிறேன். நான் யாரென்று தெரிந்து கொள். நான் கங்கை நதியின் தேவதையாவேன். அஷ்ட வசுக்கள் வசிஷ்டரின் சாபத்தால் எனக்கும் உனக்கும் பிறந்தனர். இக்குழந்தையைக் கொல்ல மாட்டேன். சிறிது காலம் வளர்த்துப் பின்னர் உன்னிடம் ஒப்படைக்கிறேன். அஷ்ட வசுக்களை மக்களாய்ப் பெற்ற நீயும் புகழ் பெறுவாய்." என்று வாழ்த்தி விட்டு மறைந்தாள்.

தேவ விரதன்

சில வருடங்கள் கழித்து சந்தனு மீண்டும் கங்கை ஆற்றங்கரைக்குச் சென்றபோது அங்கே ஒரு இளம் வாலிபன் கங்கை ஆற்றில் தன் வில் கொண்டு அம்புகளை விட்டு, நீரின் ஓட்டத்தைத் தடுக்க முயன்று கொண்டிருந்தான்.

அடுத்த பகுதி
மற்ற கதைகள்