Google
 
Web www.mazalais.com
Enable unicode to view Tamil contents

மஹா பாரதம்

தேவ விரதன்

அம்புகளால் கங்கை நதிக்கு அணைகட்டி விளையாடிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டு சந்தனு மிகவும் வியப்படைந்தான். அவ்வாலிபன் மேல் தன்னையுமறியாமல் ஒரு ஈர்ப்பு உண்டாவதையும், தனது மெய் சிலிர்ப்பதையும் உணர்ந்தான். அப்போது தன் மகனின் அம்பணைக்குக் கட்டுப்பட்டும் கட்டுப்படாமலும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த கங்கை சந்தனுவின் முன் தோன்றி, "மன்னா, உன்னிடம் நான் பெற்ற எட்டாவது மகன் தேவ விரதன் இவன்.
courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra
courtesy: Mahabharat TV serial of Dadasaheb Phalke Award winning film producer B.R. Chopra கல்வி கேள்விகளில் சிறந்தவன், அனைத்து சாஸ்திரங்களையும் கற்றவன், வில் வித்தையில் பரசுராமருக்கு சமமானவன். இவனை நான் அன்று உனக்களித்த வாக்குறிதியின்படியே உன்னிடம் ஒப்படைக்கிறேன். அழைத்துச் செல்வாயாக." என்று கூறி தேவவிரதனுக்கும் அவனது தந்தையை அறிமுகம் செய்து வைத்தாள். தன்னை வணங்கிய அன்பு மகனை நெஞ்சாரத் தழுவி அளவிலா ஆனந்தமடைந்த சந்தனு, கங்கைக்கு நன்றி தெரிவித்து விட்டு, தேவவிரதனை உடன் அழைத்துச் சென்று, ஹஸ்தினாபுரத்தின் இளவரசனாக முடி சூட்டினான், அதாவது "யுவராஜ" பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
சந்தனு தன் மகனுடன் குலாவி இன்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் யமுனை ஆற்றங்கரையில் ஒரு அழகிய, தேவதை போன்ற பெண்ணைக் கண்டான். அப்பெண்ணிடமிருந்து வீசிய விசேஷமான நறுமணம் சந்தனுவை மிகவும் கவர்ந்தது. அந்தப் பெண் வேறு யாருமல்ல, மச்சகந்தியாய் இருந்து பரிமளகந்தியாய் மாறி, பின்னர் பராசர மஹரிஷியின் அருளால் வியாசரை ஈன்றெடுத்த சத்தியவதியேதான். சத்தியவதியின் பால் மிகவும் ஈர்க்கப்பட்ட சந்தனு அப்பெண்ணிடம் சென்று தான் அவளை மிகவும் விரும்புவதாகவும், அவளை மணமுடிக்க ஆசைப் படுவதாகவும் கூற அப்பெண், "அரசே, நான் என் தந்தைக்குக் கட்டுப் பட்ட பெண். இப்பகுதியில் வசிக்கும் மீனவர் தலைவன் தான் என் தந்தை. தங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவியுங்கள்" என்று கூறிச் சென்றுவிட்டாள்.

பரிமளகந்தியின் தந்தை மிகவும் புத்திசாலி. சத்தியவதியை மணமுடிக்கும் தன் விருப்பத்தைக் கூறிய சந்தனுவை நோக்கி, "மன்னா, என் மகளை மணமுடிக்கத் தேவையான தகுதிகள் அனைத்தும் உன்னிடம் உள்ளன, உனது அரசியாகும் தகுதி என் மகளுக்கும் உண்டு, ஆனால் என் மகள் அரசியானால் அவளுக்குப் பிறக்கும் மகன் இளவரசனாக வேண்டுமல்லவா? நீ ஏற்கெனவே உன் மகன் தேவவிரதனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி விட்டாய். அதனால் இவள் மகன் இளவரசனாக முடியாது, உன் வேண்டுகோளுக்கு நான் இணங்க முடியாது" என்று மரியாதையுடன் மறுத்து விட்டான்.

கதையின் முற்பகுதி             தொடரும்....

Your feedback about this site and contents will be of immense help