Google
 
Web www.mazalais.com

Enable unicode to view Tamil contents

பழமொழிகள்

குழந்தைகளே! இவ்வுலக வாழ்க்கை மிகவும் இனிமையானது. ஆனால் அது இனிமையாக அமைய வேண்டுமெனில் நாம் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நம் முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களைப் பிறர் உணரும் பொருட்டு அவ்வனுபவங்களின் கருப் பொருளை விளங்க வைக்க நயமிக்க பொருள் புதைந்த சொற்றொடர்களை ஏற்படுத்தினர். இவைகளே பழமொழிகள் எனப்படுகின்றன. இவை என்றும் நம் வாழ்க்கைக்கு வழி காட்டுபவை. "மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்" என்பது அவைகளுள் ஒன்றாகும். இதன் பொருள் யாதெனில், முதிர்ந்த நெல்லிக் காயை நாம் கடித்துச் சுவைக்கையில் அது முதலில் கசப்பாக இருக்கும், பின்னர் அதன் இனிப்பை உணருவோம். அது போலவே எப்பொழுதும் விளையாட்டுக்களில் மனதைச் செலுத்தி இன்பம் அடைய விரும்பும் நமக்கு நம்மை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகள் முதலில் கசப்பாக இருக்கும், ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கையில் தான் அதன் இனிமையை உணருவோம்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தி நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் இது. ஒரு சத்திரத்தின் திண்ணையில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவருக்கு சளி, இருமல் பிடித்திருந்ததால் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தார். அவரருகில் வெளியூரிலிருந்து விஜய நகருக்கு வந்திருந்த முரடன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முதியவரின் இருமலால் எரிச்சல் உண்டாகவே அவரைக் கொன்று விட்டான். இதையறிந்த காவலாளிகள் சிலர் அம்முரடனைக் கைது செய்து அரசர் முன் நிறுத்தினர். விசாரணை நடந்து அவனுக்கு சிறை தண்டனை வழங்கப் பட்டது. ஏதோ யோசனையில் அம்முரடனுக்கு நல்ல சத்தான உணவளித்து அவனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி அரசர் உத்தரவிட்டார். அவனும் நன்கு சாப்பிட்டு உடல் வலு கூடி மேலும் பலசாலியாக விளங்கினான்.

இந்நிலையில் ஒரு முறை வேற்று நாட்டுப் படைகள் விஜய நரத்தை முற்றுகையிட்டன. அப்படைகளை முறியடிப்பது எப்படி என்று அரசரும் மந்திரி பிரதானிகளும் விவாதிக்கையில் அரசன் ஒரு முடிவு செய்தார். அதன்படி போர் வேண்டாம், சமாதானமாகப் போய் விடலாம் என்று ஒரு கடிதம் எழுதி அதை அப்படைத் தலைவனிடம் ஒரு தூதுவன் மூலம் கொடுத்து அனுப்புவது என்று தீர்மானித்தனர். கடிதத்தை யார் எடுத்துச் செல்வது என்று யோசிக்கையில் சிறையில் இருக்கும் முரடனிடம் கொடுத்தனுப்ப முடிவு செய்யப்பட்டு அப்படியே முரடன் கடிதத்தை எடுத்துச் சென்று அப்படைத் தலைவனிடம் கொடுத்தான். கடிதத்தைப் படித்த அப்படைத் தலைவன், "தூ, இவ்வளவு தானா விஜய நகரப் பேரரசின் வீரம்?" என்று காரித் துப்பினான். இதனால் ஆத்திரமடைந்த முரடன் உடனே தன் வாளால் அப்படைத் தலைவனின் தலையை வெட்டி விட்டான். தலைவன் கொல்லப்பட்டதால் குழப்பமடைந்த படைகளை விஜய நகரப் படை வீரர்கள் எளிதில் வெற்றி கொண்டனர்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உபயோகமற்றது என்று நாம் எதையும், யாரையும் அலட்சியம் செய்யக் கூடாது. ஒன்றுக்கும் உபயோகமற்றது என்று நாம் கருதும் சிறு துரும்பு கூட நமது பல்லிடுக்கில் சிக்கிக்கொள்ளும் உணவுத் துகள்களை அகற்ற உதவுவது போல, சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் பிறருக்குப் பயன் தராத ஒரு முரடனைக் கூட நாட்டைக் காக்கும் செயலில் ஈடுபடுத்திப் பயன் பெற முடியும் என்பது தெளிவாகிறது.

மேலும் வளரும்                                                         மற்ற கதைகள்

Your feedback about this site and contents will be of immense help